“ஜெயிலா நடத்துறீங்க”....ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ போட்ட கண்டிஷன்கள் - கடுப்பான ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் கொரோனா விதிமுறைகளை மீறும் வீரர்கள், ஊழியர்களுக்கு மிக கடுமையான தண்டனைகளை வழங்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
15வது ஐபிஎல் சீசன் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கி வரும் மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளின் வீரர்களும் மும்பையில் உள்ள பயோ பபுளுக்கு இணைந்து வருகின்றனர்.
போட்டிகள் மும்பை, புனே, அகமதாபாத் நகரங்களில் மட்டும் நடைபெறவுள்ள நிலையில் விமான பயணங்களால் கொரோனா பரவலாம் என கருதப்படுவதால் மிகக்குறைந்த தூரத்தில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.
இதனிடையே கடந்தாண்டு இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடரில் வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட சில வீரர்கள் விதிமுறைகளை மீறி பயோ பபுளை விட்டு வெளியே சென்றதால் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன.இதனால் இந்தாண்டு அப்படியான சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க பிசிசிஐ கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு வீரர் கொரோனா விதிமுறையை மீறினால் அவர் 7 அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்கள் தனிமையில் இருக்க அனுப்பப்படுவார். ஆனால் அந்த நாட்களுக்கு ஊதியம் கிடையாது.
2வது முறையாக அதே தவறு செய்தால் 7 நாள் தனிமைப்படுத்துதல் இல்லாமல் ஒரு போட்டியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார். 3வது முறை குற்றச்சாட்டு எழுந்தால் தொடரில் இருந்தே வெளியேற்றப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வெளியில் இருந்து யாரேனும் ஒருவரை அணியின் பயோ பபுளுக்குள் அனுமதித்தது தெரிந்தால் சம்மந்தப்பட்ட அணிக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். 2வது முறை இதே குற்றச்சாட்டில் சிக்கினால் அந்த அணிக்கு தொடரில் இருந்து ஒரு புள்ளி குறைக்கப்படும். 3வது முறை குற்றம்சாட்டப்பட்டால் 2 புள்ளிகள் குறைக்கப்படும்.
மேலும் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் விதிமுறையை மீறினால், அவர்களும், அந்த சம்மந்தப்பட்ட வீரரும் 7 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பப்படுவார்கள். 2வது முறை நடந்தால் குடும்பத்தினர் பபுளை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அந்த வீரர் தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பப்படுவார். இதில் சம்பந்தப்பட்ட வீரர் தவறவிடும் போட்டிகளுக்கு ஊதியம் கிடையாது.
இதனைக் கேள்விப்பட்ட வீரர்களும், அணி நிர்வாகிகளும், ரசிகர்களும் கடும் எரிச்சலில் உள்ளதாக கூறப்படுகிறது.