ஐபிஎல் பிளே ஆஃப் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி
நடப்பு ஐபிஎல் சீசனின் ஐபிஎல் பிளே ஆஃப் குறித்து முக்கிய தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் இதுவரை 48 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் மும்பை அணி மட்டுமே முதல் ஆளாக வெளியேறியுள்ள நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மற்ற அனைத்து அணிகளும் போட்டிப் போட்டு வருகின்றன. இதில் குஜராத், லக்னோ அணிகள் கிட்டதட்ட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மீதமுள்ள இரண்டு இடத்திற்கு ஹைதராபாத், ராஜஸ்தான்,பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, சென்னை ஆகிய அணிகள் முட்டி மோதியுள்ளது.
இதனிடையே லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடையவுள்ள நிலையில் பிளே ஆஃப் குறித்து முக்கிய தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் மே 24 ஆம் தேதி முதல் குவாலிஃபையர் போட்டி மற்றும் மே 26 ஆம் தேதி எலிமினேட்டர் போட்டி ஆகியவை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதேபோல் மே 27ஆம் தேதியன்று குவாலிஃபையர்-2 போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இதே மைதானத்திலேயே வரும் மே 29 ஆம் தேதியன்று இறுதிப்போட்டியும் நடைபெறவிருக்கிறது. இந்த ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டிகள் அனைத்திலும் முழு அளவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு மாநில முதல்வர்களுடனும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.