ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை புறக்கணித்த வீரர்கள் - ரூ.53 லட்சம் இழப்பீடு வழங்கிய பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம்..!

Thahir
in விளையாட்டுReport this article
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதை விட தேசிய அணிக்காக விளையாடுவதற்கு முன்னுரிமை அளித்த மூன்று மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கு இழப்பீடு வழங்கியுள்ளது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர்
நடப்பாண்டு ஐ.பி.எல் தொடர் நடந்து முடிந்து அதில் "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி" வெற்றியும் பெற்றது.
அதில் கொல்கத்தா அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் சாகிப் அல் ஹசன்.
ஆனால் அதே நேரத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக பங்களாதேஷ் தேசிய அணி களமிறங்க இருந்ததால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி தேசிய அணிக்காக விளையாடினார் ஷாகிப்.
அதேபோல கொல்கத்தாஅணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பங்களாதேஷ் துணை கேப்டன் லிட்டன் தாஸும் ஒரே ஒரு போட்டி மட்டுமே விளையாடியிருந்த நிலையில் ஐபிஎல் இருந்து விலகி பங்களாதேஷ் அணிக்காக விளையாட நாடு திரும்பினார்.
எனவே, இந்த இருவர் உட்பட ஐ.பி.எல் ஏலத்தில் விற்கப்படாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் டாஸ்கினுக்கும் இழப்பீட்டு தொகையாக $65,000 அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் 53 லட்சம் ) வழங்க இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய செயல்பாட்டுத் தலைவர் ஜலால் யூனுஸ் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய செயல்பாட்டுத் தலைவர் பேட்டி
இது குறித்து பேட்டி அளித்த பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய செயல்பாட்டுத் தலைவர் ஜலால் யூனுஸ் " லாபகரமான இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்குப் பதிலாக தேசிய அணிக்காக விளையாடத் தேர்ந்தெடுத்ததற்காக மூன்று மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கு மொத்தம் $65,000 இழப்பீடு ( இந்திய மதிப்பில் 53 லட்சம் ) வழங்க இருப்பதாகவும் அவர்கள் எங்களிடம் முறைப்படி எந்தப் பணத்தையும் கோரவில்லை, ஆனால் முழுமையாக இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ஓரளவு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் உணர்ந்தோம்". இது வழக்கமான நடைமுறையாக இருக்காது என்றார் ஜலால்.
தேசிய அணிக்காக விளையாடுவது நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், வீரர்களின் நல்வாழ்வும் எங்களது முன்னுரிமைகளில் ஒன்றாக இருப்பதால், எங்கள் வாரியம் ஒவ்வொரு வழக்கையும் பரிசீலிக்கும், ”என்று யூனுஸ் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், இந்த தொகை மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.