பஃபேயில் அதிக உணவுகளை சாப்பிட்ட நபர் - கதறிய ஹோட்டல் நிர்வாகம்
சீனாவில் உள்ள பிரபல உணவகத்தின் பஃபேயில் அதிக உணவுகளை தின்று தீர்த்த நபரை இனி உணவகத்துக்கே வரவேண்டாம் என ஹோட்டல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக பெரிய ஹோட்டல்களில் பஃபே என ஒரு முறை உண்டு. குறிப்பிட்ட தொகையை கட்டிவிட்டால் அங்குள்ள பலவிதமான உணவுகளை இஷ்டம் போல அளவே இல்லாமல் சாப்பிடலாம். எவ்வளவு சாப்பிட்டாலும் ஒரே தொகை தான்.
அப்படியாக சீனாவில் உள்ள பிரபல சங்கிலித் தொடர் உணவகமான Handadi Seafood BBQ என்ற கடைக்கு காங் என்ற யூடியூபர் அடிக்கடி செல்வதுண்டு. சங்ஷா நகரில் உள்ள அக்கடைக்கு சென்ற அவர் சமீபத்தில் பிளேட் பிளேட் ஆக உணவு வகைகளை சாப்பிட்டு துவம்சம் செய்ததால் இனி யூடியூபர் காங் தங்கள் கடைக்கு வரக்கூடாது என அவரை ஹோட்டல் நிர்வாகம் கருப்பு பட்டியலில் சேர்த்திருக்கிறது.

இதனால் அதிருப்தியடைந்த காங் என்னால் அதிகமாக சாப்பிட முடியும். அது தவறா? நான் உணவு எதையும் வீணடிக்கவில்லை. முதல் முறை அந்த உணவகத்துக்கு சென்றபோது 1.5 கிலோ பன்றி இறைச்சி சாப்பிட்டேன். அடுத்த முறை சென்ற போது சுமார் 3.5ல் இருந்து 4 கிலோ இறால் சாப்பிட்டேன். அதிகமாக சாப்பிடுபவர்கள் உணவகத்துக்கு வரக்கூடாது என கூறுவது பாரபட்சமானது என ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்தார்.
இதற்கு பதிலளித்த ஹோட்டல் உரிமையாளர் ஒவ்வொரு முறை யுடியூபர் காங் எங்கள் கடைக்கு வருகை தரும்போதும் நான் நஷ்டத்தை சந்திக்கிறேன். ஒரு தடவை வருகை தந்தால் 20 முதல் 30 பாட்டில்கள் சோயா பால் குடிக்கிறார். பன்றி இறைச்சி இருக்கும் முழு ட்ரேயையும் காலி செய்துவிடுகிறார். இறால்களை குச்சியில் எடுத்து தான் தின்பார்கள், ஆனால் இவர் முழு ட்ரேயையும் சாப்பிட்டுவிடுகிறார். இவர் மட்டுமல்ல என் கடைக்கு இனி எந்த யூடியூபரும் வந்து உணவருந்த தடை விதித்துள்ளேன் என கூறியுள்ளார்.