இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே இந்தியாவுக்கு பயணம்
இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே இந்தியா வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அவரது பயண விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவிடம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை கடனாக கோரியுள்ள நிலையில், அந்த நாட்டு நிதி அமைச்சரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்தியாவிடம் கடன் பெறுவதற்காக பசில் ராஜபக்சே செல்லவில்லை; இந்தியாவின் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலே பசில் ராஜபக்சே பயணம் மேற்கொள்கிறார். அதேபோல் இருதரப்பு சுற்றுலா உறவை மேம்படுத்தவும் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.