தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது - சித்தராமையாவிற்கு பசவராஜ் கடிதம்
கர்நாடக மாநிலத்திற்கே போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தால், தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என பசவராஜ் பொம்மை சித்தராமையாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி விவகாரம்
இந்த வருடம் தமிழகத்திற்கு போதுமான அளவில் தண்ணீர் திறந்துவிடவில்லை என காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தில் தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது. முன்னதாக, கர்நாடகம் தர வேண்டிய 37.9 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டின் கோரிக்கை ஏற்கப்படாத காரணத்தால் அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். நீண்ட காலமாக இந்த பிரச்சனை இரு மாநிலங்களுக்கு இடையே இருந்து வரும் நிலையில், சில தினங்கள் முன்பு சித்தராமையா, தங்களிடம் நீர் இருப்பு இல்லை என கைவிரித்திருந்தார்.
பசவராஜ் கடிதம்
சித்தராமையாவின் பதிலை தொடர்ந்து தமிழக அரசு நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவிற்கு அம்மாநில முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் ஜூன் ஒன்றாம் தேதி நிலவரப்படி கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளிலும் சேர்த்து 243 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணையில் 69 டிஎம்சி, பவானி சாகர் அணையில் 16 டிஎம்சி தண்ணீர் உள்ளது. பிலிகுண்டுலுவிலும் 83 டிஎம்சி தண்ணீர் இந்த ஆண்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் நான்கு அணைகளில் இருக்கும் தண்ணீர் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கும் காவிரி பாசன விவசாயத்திற்கும் போதுமானதாக இருக்காது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பீர்கள் என நம்புவதாக சித்தராமையாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.