தொழிலாளி மரணம் - திமுக எம்.பி. ராஜேஷ் நீதிமன்றத்தில் சரண்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி முந்திரி தொழிற்சாலை தொழிலாளி மரணம் தொடர்பாக தேடப்பட்டு வந்த நிலையில், திமுக எம்.பி., ரமேஷ் இன்று பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை அக்.,13 வரை நீதிமன்ற காவலில் வைக்க பண்ருட்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. பனிக்குப்பத்தில் கடலுார் தி.மு.க., எம்.பி., ரமேஷின், முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்தார். கடந்த செப்.,19ம் தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., கோமதி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோவிந்தராசு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இதுதொடர்பாக, ரமேஷ் எம்.பி., அவரது உதவியாளர் பண்ருட்டியைச் சேர்ந்த நடராஜ், சக தொழிலாளிகள் அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் 302 (கொலை), 201 (தடயம் மறைப்பது), 149 (சதித்திட்டம்), 120பி (கூட்டு சதித்திட்டம்) 147 (5 பேருக்கு மேல் கூட்டாக சேர்ந்து தாக்குதல்), 148 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த அக்.,8-ம் தேதி நடராஜ், கந்தவேல், அல்லா பிச்சை, வினோத், சுந்தர் ஆகிய 5 பேரை கொலை வழக்கில் கைது செய்த போலீசார், கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தி.மு.க., எம்.பி., ரமேஷை தேடும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில், பண்ருட்டி நீதிமன்றத்தில் முதலாவது மாஜிஸ்திரேட் கற்பகவள்ளி முன் இன்று சரணடைந்தார்.
இது குறித்து ரமேஷ் எம்.பி., பேசுகையில், தி.மு.க., ஆட்சி மீது வீண்பழி சுமத்துபவர்களுக்கு மேலும் இடம்கொடுக்க வேண்டாம் எனக் கருதி நீதிமன்றத்தில் சரணடைகிறேன் என்றும், என் மீது சுமத்தப்பட்ட புகார் ஆதாரமற்றது என சட்டத்தின் முன் நிரூபித்து வெளியே வருவேன் என்று கூறியுள்ளார்.
சரணடைந்த எம்.பி., ரமேஷை அக்.,13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பண்ருட்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.