நாட்டை விட்டு ஓடிய வங்கி கவர்னர் - சரிந்தது ஆப்கானின் மதிப்பு
ஆப்கானிஸ்தான் வங்கியின் கவர்னர் அஜ்மல் அகமதி பெரும் போராட்டத்திற்குப் பின் உயிருக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர். இதனால் அங்கு வாழும் மக்கள் உயிருக்கு பயந்து பிற நாடுகளுக்கு தப்பிச்செல்லும் காட்சிகள் கடந்த சில தினங்களாக காண்போரை அதிர்ச்சியடைய செய்தன.
இதனிடையே தாலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றிய போது அதிபர் அஷ்ரப் கானி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கார் மற்றும் ஹெலிகாப்டர் முழுக்க பணத்தோடு தப்பிச் சென்று விட்டார்.
இந்நிலையில் அந்நாட்டின் மத்திய வங்கியான டா ஆப்கானிஸ்தான் வங்கியின் கவர்னர் அஜ்மல் அகமதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டின் நாணயமாக ஆப்கானி மதிப்புச் நேற்று மட்டும் 1.7 சதவீதம் சரிந்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்க டாலருக்கு எதிரான ஆப்கானி மதிப்பு 83.5013 ஆகச் சரிந்துள்ளது. தான் வேறு வழியில்லாமல் ராணுவ விமானத்தில் வெளியேறியுள்ளதாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் அஜ்மல் அகமதி தெரிவித்துள்ளார்.