மார்ச் 15 மற்றும் 16 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் வரும் 15,16-ம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. மார்ச் 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மார்ச் 13 (மாதத்தின் 2-வது சனிக்கிழமை) மற்றும் 14-ம் தேதி வங்கிக்கு விடுமுறை நாளாகும். இதனால், சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை வங்கிகள் செயல்படாது. இதனால், வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தனியார் வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.