மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி - நாளை முதல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தத்தை தொடங்குவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை கைவிட வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் 2 நாள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக கடந்த 8 ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் கூடுதல் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் ஜோஷி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களும் கலந்து கொண்டன. இந்த கூட்டத்திலும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து திட்டமிட்டபடி 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் மேற்கொள்வார்கள் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.