எல்லை மீறும் பெங்களூர் ரசிகர்கள் - விரக்தியில் கிரிக்கெட் உலகம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்த டேனியல் கிரிஸ்டியனை பெங்களூர் ரசிகர்கள் வரம்பு மீறி விமர்சித்து வருகின்றனர்.
புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த பெங்களூர் மற்றும் நான்காவது இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான எலிமினேட்டர் போட்டி நேற்று நடைபெற்றது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
விராட் கோலி கெத்தாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தாலும் பெங்களூர் அணியால் பெரிதாக ரன் குவிக்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி வெறும் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 39 ரன்களும், தேவ்தட் படிக்கல் 21 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கடைசி ஓவரில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு தகுதியும் பெற்றது. பேட்டிங்கில் சொதப்பினாலும், பெங்களூர் அணி பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டது
இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எளிய இலக்கை எட்டுவதற்கு கடைசி ஓவர் வரை போராடியது. ஹர்சல் பட்டேல், சிராஜ், சாஹல் போன்ற வீரர்கள் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்ட போதிலும், டேனியல் கிரிஸ்டியன் மற்றும் க்ராடன் ஆகியோர் அதிகமான ரன்களை விட்டுகொடுத்ததே பெங்களூர் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இதில் குறிப்பாக டேனியல் கிரிஸ்டியன் வெறும் 1 ஓவரில் போட்டியையே மாற்றும் அளவிற்கு அதிகமான ரன்கள் விட்டுகொடுத்தார். இதனால் டேனியல் கிரிஸ்டியன் ரசிகர்களின் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். பெரும்பாலான ரசிகர்கள் டேனியல் கிரிஸ்டியன் நாகரிகமான முறையில் கிண்டலடித்து வந்தாலும், சில ரசிகர்கள் வரும்பு மீறி டேனியல் கிரிஸ்டியனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதிலும் சிலர் டேனியல் கிறிஸ்டியனின் மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்று அவரையும் வரம்புமீறி விமர்சித்திருக்கிறார்கள். ரசிகர்களின் மோசமான இந்த செயலால் கிரிக்கெட்டை உண்மையாக நேசிக்கும் அனைவரும் வேதனையடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
