ஆஸ்திரேலியாவை ஓட ஓட விரட்டிய வங்கதேசம் - 2வது போட்டியில் அசத்தல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் வங்கதேசம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் நேற்று நடந்த முதல் போட்டியில் வங்கதேச அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனிடையே 2வது டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் 45 ரன்களும், ஹென்றிக்யூஸ் 30 ரன்களும் விளாச நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது.வங்கதேச அணி தரப்பில் முஷ்தபிஷூர் ரஹ்மான் அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் அஃபிப் ஹூசைன் 37 ரன்களும், ஷகிப்-அல்-ஹசன் 26 ரன்களும் விளாச 18.4 ஓவர்களில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அடுத்தடுத்த தோல்விகளால் ஆஸ்திரேலிய அணியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.