நியூசிலாந்தை நொறுக்கிய வங்கதேசம் - 60 ரன்களுக்கு ஆல்-அவுட்டான பரிதாபம்
வங்கதேசம் அணிக்கெதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது.
ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியை கடந்த மாதம் வங்கதேசம் 4-1 என்ற கணக்கில் ஓட ஓட விரட்டியதால் இந்த தொடர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாது அணியில் கேப்டன் டாம் லாதம் மற்றும் ஹென்றி நிகோலஸ் ஆகியோர் தலா 18 ரன்கள் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
இதனால் 16.5 ஓவர்கள் முடிவில், அந்த அணி வெறும் 60 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. பின்னர் எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
வங்கதேசம் அணிக்கு எதிராக ஒரு அணியின் மிகக் குறைந்த டி20 ஸ்கோர் இதுவாகும். இதன்மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.