வீழ்ச்சியை நோக்கி ஆஸ்திரேலியா அணி - அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்
வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற 5வது மற்றும் இறுதி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது கிரிக்கெட் உலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்ட், ஒருநாள் என அனைத்து சர்வதேச போட்டிகளிலும் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்த ஆஸ்திரேலிய அணி இன்று கால் உடைந்த சிங்கமாக வீழ்ந்து கிடக்கிறது. குறிப்பாக டி20 போட்டிகளில் அந்த அணி கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது.
அதற்கு உதாரணம் நடந்து முடிந்த வங்கதேசம் அணிக்கெதிரான 20 ஓவர் தொடர் தான். 5 போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேச அணி 4 - 1 கணக்கில் வென்று ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் டி20 உலக கோப்பை தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சி அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இதற்கு காரணம் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதிகம் இல்லாததே ஆகும். சர்வதேச தரவரிசையைப் பொறுத்தவரை ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்தில் இருந்தாலும், டி20 போட்டிகளில் 6 இடத்தில் தான் உள்ளது.
ஆனால், ஆறாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள வங்கதேச அணியிடம் தோற்றது தான் வேதனையின் உச்சம். விரைவில் சிங்கத்தின் கர்ஜனை கேட்கும் என ஆஸ்திரேலிய ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.