டி20 உலகக்கோப்பையில் முதல் ஆளாக வெளியேறிய அணி -2வதாக செல்ல காத்திருக்கும் அணி எது தெரியுமா?
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 என்ற லீக் சுற்றுடன் வெளியேறும் அணிகள் கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 45 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 26 ஆட்டங்கள் முடிந்துள்ளன.
இதில் குரூப்-1 பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகளும், குரூப்-2 பிரிவில் இந்தியா,பாகிஸ்தான், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த அணிகளில் குரூப்- 1 ஐ எடுத்துக்கொண்டால் லீக் சுற்றில் ஒரு அணிக்கு 5 ஆட்டங்கள் மட்டுமே என்பதால், அனைத்து அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் வென்று அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அதேசமயம் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தலா 2 வெற்றிகளுடன் போராடி வருகின்றது. இலங்கை அணி ரன் விகித அடிப்படையில் அடுத்தடுத்த போட்டிகளில் பெரு வெற்றி பெற்றால் வர வாய்ப்புண்டு.
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஆட்டங்களில் விளையாடி, இரண்டு தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. அந்த அணி அடுத்து வரும் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு செல்ல பல சிக்கல்கள் உள்ளது. கடைசி இடத்தில் இருக்கும் வங்கதேசம் 3 போட்டிகளிலும் தோற்றதால் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறுவது உறுதியாகியுள்ளது.
குரூப் இரண்டைப் பொறுத்தவரை பாகிஸ்தான் அணி மட்டுமே 3 போட்டிகளில் விளையாடியுள்ளதால் அங்கு யார்,யார் அடுத்த சுற்றுக்கு செல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.