ஆசிய கோப்பை கிரிக்கெட் : இலங்கை - வங்காளதேச அணிகள் இன்று மோதல் - இரு அணிகள் பலப்பரீட்சை
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கை - வங்காளதேச அணிகள் இன்று மோத உள்ளன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20
துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதை கருத்தில் கொண்டு, இந்த முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 வடிவில் நடத்தப்படுகிறது. இந்தத் தொடர் முதலில இலங்கையில்தான் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அங்கு நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இரு பிரிவுகளாக 6 அணிகள்
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. 7 முறை சாம்பியனான இந்தியாவுடன், பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருக்கின்றன. அதேவேளையில் 5 முறை பட்டமும் வென்ற இலங்கையுடன், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளன.
முதலாவது போட்டி
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை அணியை வீழ்த்தியது.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் 2வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.
இலங்கை -வங்காளதேச அணிகள் இன்று மோதல்
கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இலங்கை - வங்காளதேச அணிகள் துபாயில் இன்று மோத உள்ளன. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 'பி' பிரிவில் முதல் 2 ஆட்டங்களிலும் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இந்த பிரிவில் இருந்து சூப்பர்4 சுற்றை எட்டும் மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இலங்கை- வங்காளதேச அணிகள் துபாயில் இன்று களத்தில் இறங்க உள்ளன. இதனையடுத்து, இவ்விரு அணிகள் பலத்த பலப்பரீட்சையை நடத்துகின்றன.
இந்த இரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 12 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 8-ல் இலங்கையும், 4-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.