வாழ்வா - சாவா போட்டியில் ஒருவழியாக ஜெயித்தது வங்கதேசம் - ரசிகர்கள் நிம்மதி
டி20 உலகக்கோப்பை தொடரில் ஓமன் அணிக்கெதிரான போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 2வது தகுதிச்சுற்று போட்டியில் வங்கதேசம்-ஓமன் அணிகள் மோதின. அமீரட் நகரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணி வீரர்களான நைம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 64 ரன்கள், சஹீப் அல் ஹசன் 42 ரன்கள் விளாச வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஓமன் அணியின் பிலால் கான் மற்றும் பய்யாஸ் பட் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களம் கண்டது. தொடக்க வீரர் ஜத்திந்தர் சிங் 40 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ஓமன் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஓமன் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றிபெற்றது.
அந்த அணியின் முஸ்தபிஷிர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளையும், சகீப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட வங்காளதேச அணியின் சஹீப் அல் ஹசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.