அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று - கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களுக்கு தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 45 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு கடும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதித்துள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 01, 02 ஆகிய தேதிகளில் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகம் பேர் ஒரு இடத்தில் கூடுவதை தடுக்க பத்பநாதபுரம் அரண்மனை , சர்வதேச சுற்றுலாதலமான குமரிமுனை உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாபயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.