PFI அமைப்புக்கு தடை; போலீசாரிடம் இஸ்லாமிய பெண்கள் வாக்குவாதம்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கோவையில் போராட்டம் நடத்த வந்த இஸ்லாமிய பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
NIA அதிகாரிகள் சோதனை
கடந்த 22ம் தேதி இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் அலுவலகங்கள், வீடுகளில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பின்னர் அவர்கள் பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி செய்ததாக கூறியும், முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதாகவும், தீவிரவாத அமைப்புகளில் சேர அவர்களை தீவிரப்படுத்துவதாகவும் PFI அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 100க்கும் மேற்பட்டார் பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜென்சி வழங்கிய உளவுத்துறை அளித்த தகவலின் படி, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் நேற்று புலனாய்வு அமைப்புகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
PFI அமைப்புக்கு தடை
இந்த நிலையில் இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அகில இந்திய இமாம்கள் கவுன்சில், ரிஹாப் இந்தியா அறக்கட்டளை, தேசிய மனித உரிமைகள் அமைப்பு, தேசிய பெண்கள் முன்னணி, ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன், ரிஹாப் அறக்கட்டளைஉள்ளிட்ட துணை அமைப்புகளும் சட்டவிரோதமானது எனக் கூறி 5 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு.
மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பேஸ்புக், ட்விட்டர், உள்ளிட்ட சமூக வளைத்தல பக்கத்தை முடக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பெண்கள் போராட்டம்

இந்த நிலையில் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் போராட்டம் நடத்துவதற்காக திரண்ட PFI மற்றும் SDBI அமைப்பை சேர்ந்த இஸ்லாமிய பெண்களை கோவை மாநகர காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.