ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை - சட்ட மசோதா சட்டமன்றத்தில் தாக்கல்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை செய்வதற்கான சட்ட மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள்
சமீப காலமாக ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு பல இளைஞர்கள் முதல் பெண்கள் வரை விளையாடி வருகின்றனர்.
இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி பணத்தை இழந்த பலரும் தற்கொலை செய்து கொண்டனர். அண்மையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட நிலையில்,
எதிர்க்கட்சிகள் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை அரசு தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையடுத்து நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு கடந்த ஜுன் மாதம் 27 ஆம் தேதி அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.
சட்ட மசோதா தாக்கல்
பின்னர் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பான அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பின்னர் இந்த தடை சட்டத்திற்கு அக்டோபர் 17-ல் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்ட தொடரில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.