பிபிசி ஆவணப்படம்: தடை விதித்த மத்திய அரசு - முழுப்பின்னணி இதுதான்!

Narendra Modi Gujarat India
By Sumathi Jan 26, 2023 11:34 AM GMT
Report

’இண்டியா: தி மோடி க்வெஸ்டின்’ என்ற இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை பிபிசி உருவாக்கியது . இதன் முதல் பாகம் ஜனவரி 17 அன்று பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்டது.

பிபிசி ஆவணப்படம்: தடை விதித்த மத்திய அரசு - முழுப்பின்னணி இதுதான்! | Ban On Bbc Documentary On Gujarat Riot In India

இந்தியாவில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்தும், இந்த கலவரம் நடக்க அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியும் தான் காரணம் எனவும் கூறியிருப்பதாக தகவல் வெளியானது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.  

குஜராத் கலவரம்:

 கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. நரேந்திர மோடி முதல்முறையாக குஜராத் மாநிலத்தின் 14 வது முதலமைச்சராக பதவியேற்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், அதாவது 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயிலில் இரு பெட்டிகளில் மர்மநபர்கள் தீவைத்தனர்.

பிபிசி ஆவணப்படம்: தடை விதித்த மத்திய அரசு - முழுப்பின்னணி இதுதான்! | Ban On Bbc Documentary On Gujarat Riot In India

இந்த சம்பவத்தில், 59 கரசேவர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். 2005 ஆம் ஆண்டு இது தொடர்பாக மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்ததாகவும், தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தது.

இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் : 

இதற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி இந்துத்துவ அமைப்பினர் குஜராத் முழுவதும் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதல்களை தொடங்கினர். காவல்துறையின் கட்டுப்பாடும் மீறி கோரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன.

பிபிசி ஆவணப்படம்: தடை விதித்த மத்திய அரசு - முழுப்பின்னணி இதுதான்! | Ban On Bbc Documentary On Gujarat Riot In India

1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். அரசு தகவலின்படி 790 இஸ்லாமியர்களும் 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மனித உரிமை அமைப்புகள் இதில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர். 

நரேந்திர மோடி மீது புகார் : 

குஜராத்தின் கலவரத்திற்கு நரேந்திர மோடியும், பாஜகவினருமே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு அப்போது எழுந்தது. கலவரக்காரர்களுக்கு குஜராத் காவல்துறையும் உதவியதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டின. மோடியை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது.

ஆனால் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதே நேரம் குஜராத் கலவரத்தை காரணம்காட்டி நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வரக்கூடாது என விசா தடை விதிக்கப்பட்டது. இதனால் 2014-ல் பிரதமராகும் வரை அவரால் அமெரிக்கா செல்ல முடியவில்லை.  

உச்சநீதிமன்ற வழக்குகள்: 

குஜராத் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த 2,000க்கும் மேற்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதனை தொடர்ந்து குஜராத் கலவரத்துக்கு காரணமானவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். 2011 ஆம் ஆண்டு 31 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது.

பிபிசி ஆவணப்படம்: தடை விதித்த மத்திய அரசு - முழுப்பின்னணி இதுதான்! | Ban On Bbc Documentary On Gujarat Riot In India

அதில், நரேந்திர மோடி, போலீஸ் உயரதிகாரிகள் உட்பட 59 பேர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை மறு ஆய்வு செய்யக்கோரி ஜக்கியா ஜாஃப்ரி தொடர்ந்த வழக்கு அஹமதாபாத் மாஜிஸ்திரேட் மற்றும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. 

பிபிசி ஆவணப்படம் : 

இண்டியா: தி மோடி க்வெஸ்டின்’ என்ற இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை பிபிசி உருவாக்கியது. இதன் முதல் பாகம் ஜனவரி 17 அன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு, காஸ்மிருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்டவை குறித்து விவரிக்கபட்டிருந்தது.

பிபிசியின் ஆவண படத்திற்கு இந்திய முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்த ஆவணப்படம் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையிலும் இருப்பதால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி ஆவணப்படத்தை தடை செய்தது.

இதுகுறித்து மத்திய அரசின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில் `இந்தியாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் நோக்கில் இந்த ஆவணப்படம் உருவாகியிருப்பதாகவும், இது ஆவணப்படத்தை இயக்கிய நிறுவனத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது’ என விமர்சித்திருந்தார்  

எதிர்க்கட்சிகள் கண்டனம் :  

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் பேசியதாவது, ``பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தில் புதிதாக எதுவும் இல்லை. ஏற்கெனவே வெளியான தகவல்கள்தான் இந்த ஆவணப்படமானது. கள ஆய்வுகளைச் செய்து தயாரித்த ஆய்வறிக்கை. இது உண்மை என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். அதை அவர்கள் தயாரித்து ஆவணபட வாயிலாக தெரிவித்திருக்கின்றனர். இந்தக் கலவரம் நடந்த 20 ஆண்டுக்காலத்தில், இதற்கு காரணமாக இருக்கும் நரேந்திர மோடி ஒரு முறை கூட வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதே வரலாற்று உண்மை. அதை யாராலும் மறுக்க முடியாது’’ என்றார்.

“ஒரு மணி நேர ஆவணப்படம் ‘பிரதமர் நரேந்திர மோடி சிறுபான்மையினரை எப்படி வெறுக்கிறார் என்பதை அம்பலப்படுத்துகிறது’. லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்ற எனது பிபிசி ஆவணப்படத்தின் டுவீட்டை தணிக்கை என்ற பெயரில் @Twitter @TwitterIndia நீக்கியுள்ளது. எதிர்கட்சிகள் போராட்டத்தை தொடரும்” என்று திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கூறினார்.

“காந்தியின் கொலையாளி நாதுராம் கோட்சேவை வணங்கும் மற்றொரு திரைப்படம் தடையின்றி வெளியிடப்படும்போது மோடி குறித்த ஆவணப்படம் ஏன் தடுக்கப்படுகிறது” என்று மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார் .

மேலும் பிபிசி ஆவணப்படம் இணையதளத்தில் பார்க்க முடியாத சூழல் உள்ளதால், ஆவணப்படத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

ஆவணப்பட திரையிடல்: மாணவர்களின் மீது கல்விச்சு  

இந்நிலையில் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் திரையிட திட்டமிடப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் தடையை மீறி ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதால் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது, சத்ரா பரிஷத் அமைப்பினர் கற்களை வீசினர். இதனால் மாணவர்கள் அமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பிலும் சிலர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பிபிசி ஆவணப்படம்: தடை விதித்த மத்திய அரசு - முழுப்பின்னணி இதுதான்! | Ban On Bbc Documentary On Gujarat Riot In India

இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய 25 பேர் மீது மாணவர் அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டம் நடத்திய மாணவர்கள் கலைந்து சென்றனர். பல்கலைக்கழகத்தின் சார்பில், மீண்டும் அந்த ஆவணப்படத்தை திரையிடாத வகையில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

அங்கு ஜாமர் கருவியும் பொருத்தப்பட்டதால், இணையதள சேவையும் பாதிக்கப்பட்டது. இதையும் மீறி, அங்கு கூடியிருந்த மாணவர்கள் தங்கள் செல்போன் மற்றும் லேப்டாப்பில் ஆவணப்படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

கருத்து சுதந்திரம் அவசியம் : அமெரிக்கா 

பி.பி.சி. ஆவண பட தடை பற்றிய கேள்விக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பதிலளித்து பேசினார். அவர் கூறும்போது, உலகம் முழுவதும் பத்திரிகை சுதந்திரம் முக்கியம் என்பதற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்து வருகிறோம். கருத்து சுதந்திரம், மதம் அல்லது அதுசார்ந்த நம்பிக்கையில் சுதந்திரம் போன்ற ஜனநாயகத்தன்மை கொண்ட கொள்கையின் முக்கியத்துவம் பற்றி தொடர்ந்து நாங்கள் மேற்கோள்காட்டி வருகிறோம்.

நமது ஜனநாயக மாண்புகளை வலுப்படுத்தும் மனித உரிமைகளாக அவை பங்காற்றி வருகின்றன. உலக நாடுகளுடனான எங்களது நல்லுறவில் இந்த முக்கிய அம்சம் பற்றி நாங்கள் சுட்டி காட்டி வருகிறோம். இந்தியாவுடனான உறவிலும் கூட இதனை சுட்டி காட்டியுள்ளோம் என்று கூறியுள்ளார்.  

ச.சாருக்