அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.
செல்போன் பயன்படுத்த தடை
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலை தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்களின் புனிதம் மற்றும் தூய்மையை காக்கும் விதமாக செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றம் உத்தரவு
மேலும், கோயில் வளாகத்தில் செல்போன்களை வைக்க பாதுகாப்பு அறை ஏற்பாடு செய்ய இந்து சமய அறநிலைத்துறைக்கு உயர்நீதிமன்றம் கிளை ஆணையிட்டுள்ளது. கோயில்களின் மாண்பை பாதுகாக்கும் வகையில் ஆடைகளிலும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அறநிலையத்துறை ஆணையருக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு உத்தரவிட்டு, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.