முஸ்லிம் நண்பர்களுடன் பயணித்த இந்து மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல்
கர்நாடகாவில் இஸ்லாமிய நண்பர்களுடன் பயணித்த இந்து மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பு படிக்கும் 4 ஆம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மல்பே கடற்கரைக்கு காரில் சென்றுள்ளனர்.
அப்போது காரை வழிமறித்த பஜ்ரங்தளம் அமைப்பினர் உள்ள மாணவர்களின் பெயரைக் கேட்டு மிரட்டினர். அப்போது காரில் 2 இஸ்லாமிய மாணவர்கள் இருந்ததால் இந்துக்களாகிய நீங்கள் ஏன் இவர்களுடன் சேர்கிறீர்கள் என்று கேட்டு மற்ற மாணவர்களை அவர்கள் தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை பஜ்ரந்த் தள் அமைப்பினரே செல்போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பி பெருமை பேசியிருக்கின்றனர். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்த மங்களூரு மாநகர காவல் ஆணையர் என்.சசிகுமார் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.5 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 323, 341, மற்றும் 504-ம் பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.