கர்ப்பிணி காவலர்; புழல் காவல் நிலையத்தில் வளைகாப்பு விழா - நெகிழ்ச்சி சம்பவம்!
கர்ப்பிணி காவலருக்கு வளைகாப்பு விழா நடத்தி சக காவலர்கள் அழகு பார்த்துள்ளனர்.
கர்ப்பிணி காவலர்
சென்னை புழல் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் பிரியா. இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சக காவலர்கள் பிரியாவுக்கு வளைகாப்பு விழா நடத்தி அழகு பார்க்க நினைத்துள்ளனர்.
இதற்காக உயர் அதிகாரிகளின் அனுமதியையும் பெற்றுள்ளனர். இதையடுத்து காவலர் பிரியாவுக்கு, புழல் காவல் நிலையத்தில் வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
வளைகாப்பு விழா
இந்த நிகழ்ச்சியில் கொளத்தூர் துணை காவல் ஆணையர் சக்திவேல், உயர் காவல் அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் பிரியாவிற்கு நலங்கு வைத்தும், நெற்றியில் திலகமிட்டும், கையில் வளையல் அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல் துணை ஆணையர் 5 வகை உணவுகளை பிரியாவிற்கு ஊட்டிவிட்டார். இந்த வளைகாப்பு விழா அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.