நடிகர் ஆரவ் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி - பிரபலங்கள் வாழ்த்து
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆரவ் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
ஆரவ் தமிழகத்தை சேர்ந்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவரது சொந்த ஊர் திருச்சி, படித்து முடித்த பிறகு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர், சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர் பார்த்த வேலையை விட்டுவிட்டு மாடலிங் செய்ய தொடங்கினார்.
பிறகு விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, நடிகை ஓவியாவுக்கும் ஆரவிற்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.
நடிகர் ஆரவ், அப்போது ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்னர் காதல் தோல்வியில் ஓவியா தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்தி வெளியானது.
இதன் பிறகும் இருவரும் தொடர்ந்து பழகினர். இதற்கிடையே நடிகர் ஆரவ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியானது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கொரு காதலி இருப்பதாக ஆரவ் சொன்னது அவரைத்தான் என்றும் அவர் நண்பர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த பிரச்சனைகள் ஒரு பக்கம் நடந்தாலும் 2017ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக 'ஓ காதல் கண்மணி' மற்றும் 'சைத்தான்' ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் மூலம் பிரபலமானதைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். சரண் இயக்கத்தில் வெளியான 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
அதற்குப் பிறகு 'ராஜபீமா' படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதனிடையே ஆரவ்விற்கும், 'ஜோஷ்வா' படத்தில் நாயகியாக நடித்த ராஹிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
இருவருமே பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
சென்னையில் ஆரவ் - ராஹி திருமணம் நடைபெற்ற நிலையில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சரண், விஜய், ரஞ்சித் ஜெயக்கொடி, வருண், ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆரவ்வுடன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகன், காயத்ரி ரகுமார், ஆர்த்தி, வையாபுரி, பிந்து மாதவி, ஹரீஷ் கல்யாண், ஷக்தி, காஜல் பசுபதி, சுஜா வருணி, கணேஷ் வெங்கட் ராம் ஆகியோர் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் எண்ணற்ற ரசிகர்களை பெற்ற ஆரவ்வின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆரவ் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் ரசிகர்கள் அந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.