வேட்டைக்காரர்களின் சதிச்செயல் : பாதி தும்பிக்கையை இழந்த குட்டியானை - சோகத்தில் மக்கள்
இந்தோனோசியாவின் சுமத்ரா தீவில் குட்டி யானை ஒன்று பாதி தும்பிக்கையை இழந்து பரிதவித்துவருவது காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
ஆசிய யானை இனத்தின் மூன்று இனங்களில் ஒன்றான சுமத்ரா யானை அருகிவரும் யானை வகைகளில் ஒன்றாகும். இவை இந்தோனேசியா மற்றும் சுமாத்திரா ஆகிய பிரதேசங்களில் மட்டுமே காணப்படும். கடந்த 2011 ஆம் ஆண்டில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் சுமாத்திர யானை இனம் மிக அருகிய இனமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

வாழ்விடத்திற்கான பற்றாக்குறை, களவாடப்படல், இடப்பற்றாக்குறை ஆகிய காரணங்களினால் இவை குறைந்து வருகின்றன. சொல்லப்போனால் இவற்றின் 69 வீதமான வாழிடங்கள் கடந்த 25 வருடங்களில் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த வகை யானைகள் தொடர் அழிவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் இந்தோனேஷியா அரசு இதனை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதனிடையே இந்தோனோசியாவின் சுமத்ரா தீவில் வேட்டைக்காரர்கள் வைத்த வலையில் சிக்கி குட்டி யானை ஒன்று பாதி தும்பிக்கையை இழந்து பரிதவித்து வருகிறது.

கடந்த திங்கள் கிழமை இந்தோனோசியாவில் ஆச்சே பகுதியில் யானைகளை வேட்டையாடுவதற்கு, வேட்டைக்காரர்கள் வலையை வைத்துள்ளனர். அதில் எதிர்பாரதவிதமாக சிக்கிய குட்டியானை தப்பிச்செல்ல முயற்சிக்கும் போது தன்னுடைய பாதி தும்பிக்கையை இழந்துவிட்டதாக வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.