அக்குபஞ்சர் முறையில் பிரசவம்: தாய், சேய் பரிதாப மரணம்
தமிழகத்தில் அக்குபஞ்சர் முறையில் பிரசவம் பார்த்த போது தாயும், சேயும் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. பெரம்பலூரின் பூலாம்பாடியைச் சேர்ந்தவர் விஜயவர்மன் (35), இவரது மனைவி அழகம்மாள்(வயது 29). திருமணமாகி 2 ஆண்டுகள் கழித்து அழகம்மாள் கர்ப்பம் தரித்தார், அன்றிலிருந்து ஆங்கில மருத்துவத்தை அணுகாமல் இயற்கை முறை சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில் அழகம்மாளுக்கு கடந்த சனிக்கிழமை 09.01.2021 இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த போது ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. அழகம்மாளின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அழகம்மாள் பரிதாபமாக நேற்று இரவு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா எஸ்.பி.யிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தப் புகாரில் அழகம்மாளின் இறப்பு கொலை என்றும் அவருக்கு அக்குபஞ்சர் முறையில் பிரசவம் பார்ப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.