இனி குழந்தை வைத்திருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம்... ரயில்வேயின் சூப்பர் ஐடியா
குழந்தை வைத்திருப்பவர்கள் வசதிக்காக தெற்கு ரயில்வே சூப்பர் ஐடியா ஒன்றை கையாண்டுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ரயில் பெட்டிகளில் உணவு டெலிவரி, ஏசி பெட்டிகளில் போர்வை வசதி போன்றவற்றை நிறுத்தி பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில் மெல்ல மெல்ல பழைய முறைப்படி அனைத்தும் மாறி வருகிறது.
இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு சூப்பரான அறிவிப்பு ஒன்றை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி விரைவில் 70 எக்ஸ்பிரஸ் ரயில்களில் தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில் புதிய படுக்கை வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு ரயில்வேயில் ஓடும் "லக்னோ மெயில்" ரயிலின் முன்பதிவு பெட்டியில் பெண்கள் பயணம் செய்யும்போது தங்களது குழந்தையை பக்கத்தில் பாதுகாப்பாக படுக்க வைக்கும் வகையில் புதிய படுக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதாவது வழக்கமான படுக்கை வசதிக்கு பக்கத்திலேயே குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக சிறிய அளவிலான சீட் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில் குழந்தை உருண்டு கீழே விழாமல் இருக்க ஒரு இரும்பு கம்பியும் பொருத்தப்பட்டுள்ளது.. தாயின் சீட்டை ஒட்டியே குழந்தைக்கான சீட்டும் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு, ரயில் பயணியர் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதை பார்த்ததுமே மற்ற கோட்டங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.