அயோத்தியில் மசூதி கட்டும் பணி தொடக்கம்
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில், தேசியக் கொடியை ஏற்றிய பிறகு, வழக்கமான நடைமுறைக்கு பிறகு அயோத்தியில் மசூதி கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குப் பதிலாக புதிய மசூதி கட்ட சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதற்கென ராமஜென்ம பூமியில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தான்னிப்பூரில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
மசூதி கட்டுமானப் பணியை மேற்கொள்ள இந்தோ-இஸ்லாமிய கலாசார கழகம் என்ற அறக்கட்டளையையும் சன்னி வக்பு வாரியம் அமைத்தது. இந்நிலையில், நாட்டின் 72வது குடியரசு தினமான நேற்று, அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான பணி தேசியக்கொடியை ஏற்றி வித்தியாசமான முறையில் தொடங்கி வைக்கப்பட்டது. மசூதி கட்ட அமைக்கப்பட்டுள்ள இந்தோ - இஸ்லாமிக் கலாசார அறக்கட்டளையின் தலைவர் ஜாபர் அகமது பரூக்கி, தேசியக்கொடியை ஏற்றினார்.
அறக்கட்டளையின் 12 உறுப்பினர்கள் மரக்கன்றுகளை நட்டு, மசூதி கட்டும் பணியை தொடங்கி வைத்தனர். அயோத்தி மசூதி வளாகத்தில் பல்நோக்கு மருத்துவமனை வளாகம், சமுதாய சமையல் கூடம், நூலகம் உள்ளிட்டவை இருக்கும். இந்த மசூதி வட்ட வடிவில், சுமார் 2000 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தும் வகையில் கட்டப்பட உள்ளது.
அயோத்தியில் அமைய உள்ள மசூதியின் மாதிரி வரைபடங்களும் அண்மையில் வெளியிடப்பட்டது. புதியதாக கட்டப்படும் மசூதிக்கு, ‘பாப்ரி மஸ்ஜித்’ என்பதற்கு மாற்றாக ‘தனிபூர் மஸ்ஜித்’ என்று அழைக்கப்படும். அறக்கட்டளை செயலாளர் அத்தார் ஹுசைன் கூறுகையில், ‘மசூதி கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டுவதற்கு குடியரசு தினத்தை எங்கள் அறக்கட்டளை தேர்ந்தெடுத்தது.
காரணம், 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் நமது அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. அரசியல் சாசனத்தின் அடித்தளமாக அமைந்த பன்முகத்தன்மைதான், புதியமசூதியின் அடிநாதமும் கூட’ என்றார்.