அம்பேத்கர் பிறந்த நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
நேற்று தமிழக சட்டபேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.
மேலும் அந்நாளில் சமத்துவ நாள் உறுதி மொழி எடுக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் அண்ணல் அம்பேத்கர் உருவபடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின் சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு சென்ற முதலமைச்சர் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் சாதி வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க பாடுபடுவோம் என்ற சமத்துவ நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி,அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.