ஆயுதபூஜை பண்டிகைக்கு 500 பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.
வரும் அக். 14-ம் தேதி ஆயுத பூஜை (வியாழக்கிழமை) விடுமுறை வருகிறது. வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டால், சனி, ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறையை அனுபவிக்கலாம்.
இதனால், சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, மக்களின் தேவைக்கு ஏற்றாற்போல, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளன.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, "ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளோம்.
படுக்கை வசதியுடன் கூடிய ஏசி, சொகுசுப் பேருந்துகளும் இதில் அடங்கும். தேவைப்பட்டால் உடனுக்குடன் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
300 கி.மீ. தொலைவுக்கு மேல் பயணிக்க விரும்புவோர் முன்பதிவு மையங்கள் அல்லது www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்" என்றனர்.