ராமர் கோவில் கட்டியாச்சு.. மசூதி எங்கே..? - விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன் வெளியிட்ட Video!
மசூதியும் எழுப்பிவிட்டு ஒட்டுமொத்த இந்தியர்களும் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் இடுவோம் என்று விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன் தெரிவித்துள்ளார்.
ராமர் கோவில்
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார். தற்போது பொதுமக்கள் அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் ஒன்றில் "அயோத்தியில் மசூதியும் மிகப்பிரமாண்டமாக கட்டிவிட்டு ‛ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது "‛ஜெய் ஸ்ரீராம்' இந்த வார்த்தை தான் இந்தியா முழுவதும் இப்போது கேட்டு கொண்டு இருக்கிறது.
ஒருபக்கம் ராமர் பிறந்த பூமியான அயோத்தியில் ராமருக்கு மிகப்பெரிய கோவில் கட்டிய சந்தோஷம். இன்னொரு பக்கம் பாபர் மசூதியை இடித்துவிட்டு தான் கோவில் கட்டியிருக்கிறீர்கள் என்ற வருத்தம். ஒன்றை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
எம்மதமும் சம்மதம்
இந்தியாவை ஆண்ட மன்னர், ஆட்சியாளர்கள் தான் விரும்பும் கடவுள், இருக்கும் மதத்துக்கு கோவில் கட்டுவது வழக்கம். அது ராஜராஜசோழன் காலத்திலிருந்து இன்று வரை உள்ளது.
அப்படித்தான் பாரத பிரதமர் தனக்கும், ராமருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மிகப்பெரிய கோவிலை கட்டியுள்ளார். ஆனால் இந்தியா என்பது மதம் சார்ந்த நாடு இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை, எம்மதமும் சம்மதம் எனச்சொல்லி தான் நாம் குழந்தைகளை வளர்த்து கொண்டு இருக்கிறோம். நாமும் வளர்ந்து இருக்கிறோம்.
மேலும்‛பாய்' வீட்டில் ரம்ஜான் என்றால் இந்து வீட்டுக்கு பிரியாணி வரும். இந்து வீட்டில் பண்டிகை என்றால் ‛பாய்' வீட்டுக்கு பலகாரம் போகிறது. இப்படித்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். இன்றைக்கு அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டி உள்ளோம். ஆனால் நீதிமன்ற தீர்ப்பின்படி மசூதி கட்டவும் இடம் ஒதுக்கி இருக்கிறார்கள்.
ஆனால் இன்று வரை மசூதி எழுப்பப்படவில்லை. அந்த இடத்திலும் மிகப்பிரமாண்டமாக மசூதி எழுப்பிவிட்டு ஒட்டுமொத்த இந்தியர்களும் இந்துக்கள் உட்பட அனைவரும் ஜெய் ஸ்ரீராம் என்று சத்தமாக முழக்கம் இடுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.