அயோத்தி: ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் - முக்கிய அறிவிப்பு!
ராமர் கோவில் தொடர்பான முக்கிய அறிவிப்பை அறக்கட்டளையின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
ராமர் கோயில்
உத்தரப்பிரதேசம், அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு, பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இங்கு 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில் 3 தளங்கள் அமைக்கப்படுகிறது. கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நூலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம், மூலவர் மண்டபம் உள்பட 6 மண்டபங்கள் அமைப்பட உள்ளது. 161 அடி உயரத்தில் மூலவர் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
முக்கிய வேண்டுகோள்
இந்நிலையில், 2024 ஜனவரி மாதம் 14ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்த பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு முறைப்படி கோவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜனவரி 22ம் தேதி அயோத்தி ராமர் கோவிலுக்கு மக்கள் வர வேண்டாம். மாறாக அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உங்கள் அருகே உள்ள கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள்.
ஏனென்றால் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அயோத்தியில் உறுதி செய்வதில் சிரமம் உள்ளது. இங்கு தங்கும் அறைகள் கிடைக்காவிட்டால் கஷ்டமாகி விடும். கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். தற்போதைய சூழலில் கோவில் கருவறை, அதில் நிறுவப்படும் சிலை தயாராக உள்ளது.
ஆனாலும் ஏராளமான பக்தர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் கோவில் வளாகம் என்பது இன்னும் தயாராகவில்லை. அதோடு கோவில் பணிகள் என்பது முழுவதுமாக முடியவில்லை. இந்த பணிகள் முடிய 2 ஆண்டுகள் வரை ஆகும். இதனால் பக்தர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில்களில் கொண்டாட வேண்டும் என அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.