அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.1 லட்சம் நன்கொடை- முஸ்லீம் தொழிலதிபர் வழங்கினார்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த முஸ்லீம் தொழிலதிபர் ஹபீப் ரூ.1 லட்சத்தை நன்கொடையாக வழங்கி இருக்கிறார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நிதி சேகரிக்கும் பணிகளை 'ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர' அறக்கட்டளை தொடங்கி இருக்கிறது. நிதி திரட்டும் பணியில் ஆர்எஸ்எஸ், பாஜக, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் களமிறங்கி இருக்கின்றன.
நாடு முழுவதும் 4 லட்சம் கிராமங்களுக்கு நேரில் சென்று 11 கோடி குடும்பங்களை சந்தித்து நிதி திரட்ட இந்து அமைப்புகள் முடிவு செய்திருக்கின்றன. அதனையடுத்து, நிதி சேகரிப்பு கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 28-ம் தேதி வரை நிதி சேகரிக்கப்பட இருக்கிறது. இதுவரை ரூ.1,500 கோடி கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள முஸ்லீம் தொழிலதிபர் ஹபீப் என்பவர், ராமர் கோயில் கட்ட ரூ.1 லட்சத்து 8 நன்கொடையாக வழங்கி இருக்கிறார். இத்தொகையை சென்னை மாநகர இந்து முன்னணி செயலாளர் டி.இளங்கோவனிடம் ஹபீப் வழங்கியுள்ளார்.