ராமர் கோயிலுக்கு நிதி கேட்டு என்னை மிரட்டுகிறார்கள்: குமாரசாமி குற்றச்சாட்டு
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு நிதி கேட்டு தான் மிரட்டப்பட்டதாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோயில் கட்டுவதற்காக நாடு முழுவதும் நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராமர் கோயிலுக்கு நிதிகேட்டு மக்கள் மிரட்டப்படுவதாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வரான குமாரசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " ஒரு பெண் உட்பட மூன்று பேர் என் வீட்டிற்கு வந்து ராமர் கோயிலுக்கு நான் ஏன் நிதி கொடுக்கவில்லை என்று கேட்டு என்னை மிரட்டினர்" எனத் தெரிவித்தார்.
மேலும், "இது நாட்டின் பிரதான பிரச்னை. ராமர் கோயில் கட்டுகிறோம் எனும் பெயரில் மற்றவர்களை அச்சுறுத்தி பணம் சேகரிக்கின்றனர். வசூல் செய்யப்படும் பணத்தை நிர்வகிப்பது குறித்த வெளிப்படைத்தன்மை எங்கே?" என கேள்வி எழுப்பினார்.