லாரிகள் மோதிய விபத்தில் சூடான தார் கொட்டி ஓட்டுநர் பலி - கோர சம்பவம்
அவிநாசி அருகே டேங்கர் லாரி மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சூடான தார் கொட்டி சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மங்களூரில் இருந்து தார் ஏற்றி கொண்டு டேங்கர் லாரி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. சேலம் - கோவை புறவழிச்சாலை அவிநாசி ராக்கியாபாளையம் பிரிவு அருகே வரும்போது புதிய திருப்பூர் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி, எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டேங்கர் லாரியின் வால்வு உடைந்து சூடான தார் கொட்டியதில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் கவியரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படுகாயமடைந்த டேங்கர் லாரி ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கவியரசனின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.