தாய் மீது கவிழ்ந்த ஆட்டோ.. ஒற்றை ஆளாக பள்ளி மாணவி செய்த செயல் - வைரல் வீடியோ!
மங்களூரு அருகே தாய் மீது கவிழ்ந்த ஆட்டோவை 14 வயது சிறுமி ஒருவர் ஆட்டோவை தூக்கி நிறுத்தி காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மங்களூரு
கர்நாடக மாநிலம் மங்களூரு ராஜரத்தினபுரத்தைச் சேர்ந்தவர் சேதனா.இவருக்கு வயது 35. டியூசன் சென்ற தனது மகளை அழைத்து வருவதற்காக இரவு சென்றுள்ளார். அப்போது அவர் சாலையை கடக்க முயன்றபோது, ஆட்டோ ஒன்று வந்துள்ளது.
இதனிடையே சேதனா வேகமாக செல்ல முயன்ற போது, ஆட்டோ ஓட்டி வந்தவர் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை முடிந்தவரை வளைத்து இடது புறம் திருப்பினார்.
ஆனாலும், தவிர்க்க முடியாமல் ஆட்டோ அந்த இடத்தில் பைக் மீது அமர்ந்துகொண்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தவரின் மீது மோதியதுடன், அந்த பெண் மீதும் மோதி அவர் மீது கவிழ்ந்தது.
வைரல் வீடியோ
இந்த விபத்தை கண்ட சேதனாவின் மகள் வேகமாக ஓடி வந்து துரிதமாக செயல்பட்டு தைரியத்துடன் தன் முழு பலத்தையும் வெளிப்படுத்தி அந்த ஆட்டோவை தூக்கி நிறுத்தினார். உடனடியாக அங்கு இருந்தவர்களும், அந்த வழியாக சென்றவர்களும் அந்தப் பெண்ணுக்கு உதவுவதற்காக விரைந்து வந்தனர்.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அருகில் இருந்த சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தில் பலத்த காயமடைந்த சிறுமியின் தாய் மீட்கப்பட்டு சூரத்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. விபத்தில் சிக்கிய தாயை பள்ளி மாணவி காப்பாற்றும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.