பழிக்குப் பழியாக கழுத்தறுத்து ஆட்டோ டிரைவர் கொலை - 3 பேர் கைது
மதுரை அருகே காட்டுப் பகுதியில் ஆட்டோ டிரைவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துதகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த திருமங்கலம் டி.எஸ்.பி. வினோதினி நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் ரவிக்குமார் மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே பன்னியான் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், செக்காணூரணி ஆட்டோ ஸ்டாண்டில் இரவு 12 மணி வரை பணியில் இருந்ததும் தெரிய வந்தது.
மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட பன்னியான் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, செக்காணூரணி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்ததும் தெரிய வந்தது.
ரவிக்குமார் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற் கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குப் பிரேதத்தை அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சோழவந்தானைச் சேர்ந்த சிவபிரகாஷ், செக்காணூரணியை சேர்ந்த மது, மற்றும் பன்னியானை சேர்ந்த காசி விஸ்வநாதன் ஆகிய மூன்று இளைஞர்களைக் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.