லட்சக்கணக்கில் மரங்களை நட்ட ஆட்டோ டிரைவருக்கு டாக்டர் பட்டம்
லட்சக்கணக்கில் மரங்களை நட்ட ஆட்டோ டிரைவரின் சேவையைப் பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் ஓம்சக்திநகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் எஸ். சாகுல் ஹமீது 33, இதுவரை 1.25 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளார். இவரது சமூக சேவைக்காக கவுரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது.
ஆட்டோ டிரைவர் எஸ்.சாகுல் ஹமீது கூறுகையில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பசுமை இந்தியா கனவை நிறைவேற்ற தொடர்ந்து மரக்கன்றுகள் நட்டுவருகிறேன். டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் நம் உரிமை அனைத்து வாகன ஓட்டுனர் நலச்சங்க மாநில தலைவராக உள்ளேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தினமலர் நாளிதழ் ஞாயிறு சண்டே ஸ்பெஷலில் எனது சேவையை பாராட்டி கட்டுரை வெளியானது. அதுமேலும் என்னை ஊக்கப்படுத்தியது, மரக்கன்றுகளுடன் ரத்ததான உதவியும் செய்கிறேன்.
கொரோனா காலக்கட்டத்தில் 5 ஆயிரம் முகக்கவசங்கள் வழங்கியுள்ளேன். எனது சமூக சேவையை பாராட்டி யு.எஸ்.ஏ.,வை சேர்ந்த சென்னையில் உள்ள உலக அமைதி பல்கலை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது,'என்றார்.