ஒரு நாட்டையே உருவாக்கி அதிபரான 20 வயது இளைஞர் - எப்படி பாருங்க!
20 வயது இளைஞர் சிறிய நாட்டை உருவாக்கி அதன் அதிபராகியுள்ளார்.
வெர்டிஸ்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் டேனியல் ஜாக்சன்(20). இவர் குரோஷியாவுக்கும் - செர்பியாவுக்கும் இடையே டானூப் ஆற்றின் குறுக்கே 125 ஏக்கரில் அமைந்துள்ள ஆள் நடமாட்டம் இல்லாத நிலத்தை 'வெர்டிஸ்' குடியரசு நாடாக அறிவித்துள்ளார்.
மேலும், அந்நாட்டின் அதிபராக அவரே பதவியேற்றுள்ளார். இந்தப் பகுதி உரிமை கோரப்படாத நிலம். இப்படி இந்த நாட்டை உருவாக்க 14 வயது முதலே டேனியல் ஆர்வமாக இருந்துள்ளார். ஒரு கொடி, ஓர் அடிப்படை அரசியலமைப்பு, அமைச்சரவை ஆகியவற்றை உருவாக்கியுள்ளார்.
இப்போது அந்நாட்டில் 400 பேர் குடியிருந்து வருவதாக தெரிகிறது. இந்நாட்டின் மொழிகளாக ஆங்கிலம், குரோஷியன் மற்றும் செர்பியன் ஆகியவை உள்ளன. மேலும், யூரோ நாணயமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு ஓசிஜெக்கில் இருந்து படகு மூலம் மட்டுமே செல்ல முடியும்.
தனி நாடு
ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. அவை சர்வதேச பயணத்திற்குச் செல்லுபடியாகாது. அதேநேரத்தில் சிலர், வெர்டிசியன் பாஸ்போர்ட்களைப் பயன்படுத்தி மற்ற நாடுகளுக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளதாக டேனியல் கூறியுள்ளார்.
இந்த நாட்டின் குடிமகனாவதற்கு மருத்துவம், பாதுகாப்பு அல்லது சட்ட நிபுணத்துவம் பெற்ற நபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
மே 30, 2019 அன்று, அவர் வெர்டிஸ் சுதந்திரக் குடியரசின் சுதந்திரத்தை அறிவித்துள்ளார். தனக்கு அதிகார வெறி இல்லை என்றும், தாம் பதவி விலகி சுதந்திரமான தேர்தலை நடத்தவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.