ராமேஸ்வரம் தீவு பகுதியில் தஞ்சம் புகுந்த நூற்றுக்கணக்கான பறவைகள்!!
ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் கோதண்டராமர் கோவில் கடற்கரை பகுதிகளில் ஆஸ்திரேலிய பறவைகளான ஃபிளமிங்கோ பறவைகள் நூற்றுக்கணக்கில் வந்து குவிந்துள்ளன.
இதனைக் காணும் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் தீவு பகுதியில் தனுஷ்கோடி தொடங்கி கோதண்டராமர் கோவில் கடற்கரை வரை உள்ள தரவை பகுதிகளில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் வரை நீர் நிறைந்து காணப்படும்.
இந்த தரவை பகுதிகளில் நீர் நிறையும் போது உற்பத்தியாகும் புழுக்களை உண்பதற்காக ஆஸ்திரேலிய பறவைகளான செங்கால்நாரை என அழைக்கப்படும் ஃபிளமிங்கோ பறவைகள்
ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத்தில் இங்கு வந்து மார்ச் மாதம் வரை தங்கி இந்தத்தரவைப் பகுதியில் வளரும் புழுக்களை உணவாக உண்ணுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து ஃபிளமிங்கோ பறவைகள் வருகை வெகுவாகக்குறைந்து நூற்றுக்கணக்கிலேயே வந்துள்ளன.
உடல் வெண்மை நிறத்திலும் இறக்கைகளின் அடிப்பாகம் கருப்பு சிவப்பு நிறத்திலும் உள்ளன.
2.5 அடி நீளமுள்ள சிவந்த கால்கள் அன்ன நடைபோட 2.5 அடி நீளமுள்ள கழுத்தை உயர்த்தி ராணுவ வீரனின் மிடுக்கோடு வரிசையாக இவை நடந்து செல்வது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
கூட்டம் கூட்டமாக இறை தேடும் இந்த பறவைகளை தனித்து நிற்கும் ஒரு பறவை மெய்க்காப்பாளன் போல நின்று பாதுகாக்கிறது.
ஆள் அரவம் கேட்டால் தனித்துநிற்கும் பறவை எச்சரிக்கை விடுத்ததும் அனைத்து பறவைகளும் பறந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடுகின்றனர்.
இந்தப்பறவைகளை சமூக விரோதிகள் வேட்டையாடாமல் தடுக்கவும் இதை பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் தரைவையிலிறங்கி பறவைகளை தொந்தரவு செய்யாமல் பாதுகாக்க இப்பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைத்து பாதுகாக்க வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.