ஊழியர்கள் அனைவருக்கும் 55 லட்சம் போனஸ் - இப்படி ஒரு நிறுவனமா?
தொழிநுட்ப நிறுவனம் ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.55 லட்சம் போனஸ் வழங்கியுள்ளது.
55 லட்சம் போனஸ்
பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வருடம் ஒரு முறை போனஸ் வழங்கும். சில நிறுவனங்கள் ஊதியத்தில் 10% போனஸாக வழங்கும். சில நிறுவனங்கள் அது கூட வழங்காது.
ஆனால் ஒரு நிறுவனம் ஒன்று தன்னிடம் வேலை பார்க்கும் அனைவருக்கும் தலா ரூ.55 லட்சம் போனஸ் வழங்கியுள்ளது.
ஏர் டிரங்க்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஏர் டிரங்க் என்னும் தொழில்நுட்ப நிறுவனம் பல்வேறு நிறுவனங்களின் டிஜிட்டல் தகவல்களை பாதுகாக்கும் டேட்டா மையங்களை செயல்படுத்தி வருகிறது.
2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், ஆஸ்திரேலியா, ஜப்பான், மலேசியா உட்பட உலகின் 11 இடங்களில் தங்களது டேட்டா மையங்களை நிறுவியுள்ளது. கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்களுக்கு டேட்டா சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த சொத்து மேலாண்மை நிறுவனமான பிளாக் ஸ்டோன், ஏர் ட்ரங்க் நிறுவனத்தை 24 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியுள்ளது.
ரூ.186 கோடி
இதன் மூலம் கிடைத்த லாபத்தில் அங்கு வேலை பார்க்கும் 330 ஊழியர்களுக்கும் சேர்த்து மொத்தமாக 22 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ186 கோடி) போனஸ் வழங்கியுள்ளனர். இதன்படி ஒரு ஊழியருக்கு தலா 65,000 டாலர்(இந்திய மதிப்பில் ரூ.55 லட்சம்) வழங்கியுள்ளார் அந்த நிறுவன சிஇஓ ராபின் கூடா.
ஊழியர்களுக்கு இது போன்ற சலுகைகள் வழங்குவது இந்நிறுவனத்திற்கு புதிதல்ல. கடந்த ஆண்டு ஊழியர்கள் அனைவரும் பாலி தீவுக்கு இலவச சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
"தற்போது எங்கள் நிறுவனம் 24 பில்லியன் மதிப்பை எட்டியுள்ளது. முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் ஏஐ, கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா செண்டர்கள் ஆகியவற்றில் 1 டிரில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளன. விரைவில் 100 பில்லியன் மதிப்புடைய நிறுவனமாக மாறுவோம்" என ராபின் கூடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.