தாமதமாக டிக்ளேர் செய்தது பற்றி ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பதில்

sydney australia vs england ashes match australia captain cummins
By Swetha Subash Jan 10, 2022 11:10 AM GMT
Report

ஆஸ்திரேலிய அணியின் 2-வது இன்னிங்ஸில் தாமதமாக டிக்ளேர் செய்தது பற்றி ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ் பதில் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று 3-0 என்கிற முன்னிலையுடன் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. 4-வது டெஸ்ட் சிட்னியில் புதன் அன்று தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 134 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

கவாஜா 137, ஸ்மித் 67 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்களில் 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜானி பேர்ஸ்டோ 113 ரன்களும் ஸ்டோக்ஸ் 66 ரன்களும் எடுத்தார்கள்.

ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளை எடுத்தார். ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 68.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸில் சதமடித்த உஸ்மான் கவாஜா 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேம்ரூன் கிரீன் 74 ரன்கள் எடுத்தார்.

2019 ஆஷஸ் தொடருக்குப் பிறகு ஆஸி. அணியில் மீண்டும் இடம்பிடித்த 35 வயது கவாஜா, தன்னுடைய 45-வது டெஸ்டில் 9-வது மற்றும் 10-வது சதங்களை எடுத்துள்ளார்.

ஆஷஸ் தொடரில் நான்கு வருடங்களுக்குப் பிறகு சதமடித்துள்ளார்.

டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஆஸி. அணியில் இடம்பிடித்த கவாஜா, இந்தச் சதங்களால் தனக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கவேண்டிய நெருக்கடியை உருவாக்கியுள்ளார்.

சிட்னி டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 388 ரன்கள் இலக்கு அளிக்கப்பட்டது.

5-ம் நாளில் இங்கிலாந்து அணி 102 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து ஆட்டத்தைப் பரபரப்பான முறையில் டிரா செய்தது.

ஸாக் கிராவ்லி 77 ரன்களும் பென் ஸ்டோக்ஸ் 60 ரன்களும் எடுத்தார்கள்.

இந்நிலையில் 4-ம் நாளன்று 68.5 ஓவர்கள் விளையாடி நேரத்தை வீணடித்துத் தாமதமாக டிக்ளேர் செய்ததால் ஆஸி. அணியால் வெற்றி பெற முடியவில்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

இதற்கு ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் பதில் அளித்ததாவது: ஒரு ஓவருக்கு மூன்றரை ரன்கள் எடுக்கவேண்டிய நிலையை நான் எதிர்பார்த்தேன்.

ஆடுகளமும் மோசமாக இல்லை. அவர்கள் நன்றாக விளையாடினால் 350 ரன்களை எடுத்து விட முடியும். 110 ஓவர்கள் போதுமானதாக நான் கருதினேன் என்றார்.