208 ரன்கள் அடித்தும் தோல்வி..எங்கு சரிந்தது இந்தியா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 208 ரன்களை குவித்தும் மோசமான பந்துவீச்சால் தோல்வியை தழுவியது.
டி20 போட்டி
இந்திய அணியில் பும்ரா இல்லாதது பெரும் பின்னடைவாக அமைந்தது. ஆனால், இவ்வளவு பெரிய தொடருக்கு முன் ஒரே ஒரு பும்ரா மட்டும் இருந்தால் போதுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தோல்விக்கு காரணம் என்ன
ஆசிய கோப்பையில் அடைந்த தோல்விக்கு என்ன காரணமோ, அதே கோரணத்தால் தான் இந்தப் போட்டியிலும் இந்தியா தோற்றது. ஆம் டெத் பவுலிங்கில் சொதப்பியது தான் காரணம்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனையடுத்து ரோகித் சர்மா தனது அதிரடியை காட்டி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியை விரட்டி 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 2 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து கேஎல் ராகுல், சூர்யகுமார் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை மீட்டனர்.குறிப்பாக கேஎல் ராகுல் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்துக்கு பேட்டால பதிலடி தந்தார். 35 பந்துகளில் 55 ரன்கள் விளாசிய நிலையில், ராகுல் கேட்ச் ஆனார்.
சூர்யகுமார் சாதனை
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்கள் அடித்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார். சூர்யகுமாரும் தனது சிக்சர் வேட்டையை தொடங்க, அவரும் 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஹர்திக் பாண்டியா இறுதியில் ருத்ரதாண்டவம் ஆடினார். குறிப்பாக கடைசி ஓவரில் கடைசி 3 பந்தில் ஹாட்ரிக் சிக்சர் விளாச, 30 பந்துகளில் ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது.
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. கிரின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை தொடர்ச்சியாக அடித்தார்.
ஆரோன் பிஞ்ச் 22 ரன்களில் வெளியேற, கேமரான் கிரின் 30 பந்துகளில் 61 ரன்கள் விளாச, ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றியை நோக்கி சென்றது. அப்போது உமேஷ் யாதவ் வீசிய ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா வெற்றி
இதனால், ஸ்மித், மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, அக்சர் பட்டேலும் ஜாஸ் இங்லிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி 4 ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 55 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது வழக்கம் போல் புவனேஸ்வர் குமார் 17வது ஓவரில் 15 ரன்களும், ஹர்சல் பட்டேல் 18வது ஓவரில் 22 ரன்களும் கொடுக்க, ஆஸ்திரேலிய அணி 4 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது. அக்சர் பட்டேலை தவிர வேறு யாரும் பந்துவீச்சில் சோபிக்கவில்லை