இனி பாகிஸ்தானை நடத்த விடக்கூடாது; அரையிறுதி வாய்ப்பு யாருக்கு - விளாசும் ரசிகர்கள்!
ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்காவை வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
AFG vs AUS
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 9 வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, சாம்பியன்ஸ் டிராபியில் 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. வங்கதேசம் பாகிஸ்தான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. 'பி' பிரிவில் இங்கிலாந்து அரையிறுதிக்கு வாய்ப்பை இழந்து விட்டது.
அரையிறுதி வாய்ப்பு?
அந்த பிரிவிலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் 2 அணிகளின் இடத்திற்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தொடர்ந்து லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இதற்கிடையில், கனமழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்ட நிலையில், 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலியா அணி, ஏ பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் 3 புள்ளிகளுடன் இருந்தாலும் நெட் ரன்ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்தை எதிர்கொள்ளும் அந்த அணி மிகப்பெரிய நெட் ரன்ரேட் அடிப்படையில் தோல்வியடைந்தால் மட்டுமே ஆப்கான் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.