ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளரை மாற்றியதற்கு இதுதான் காரணமாம்? பரபரப்பு தகவல்
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதி பழங்குடியினருக்கான தொகுதியாகும். இத்தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக ஜீவா ஸ்டாலின் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவரை மாற்றிவிட்டு புதிய வேட்பாளாராக கு.சின்னதுரை அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
முன்பாக அறிவிக்கப்பட்ட ஜீவா ஸ்டாலின் ஆதிதிராவிடரா? என்பதில் சர்ச்சை எழுந்தது. அதனையடுத்து, ஆத்தூர் அருகே புங்கவாடி ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த மாரிமுத்து உள்பட 30-க்கும் மேற்பட்டோர் ஆத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் துரையிடம் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார்கள்.
அதில் ஆத்தூர் (தனி) தொகுதி தி.மு.க. வேட்பாளராக ஜீவா ஸ்டாலினை அக்கட்சி தலைமை வேட்பாளராக அறிவித்திருக்கிறது. இவர் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர் கிடையாது. அதனால், இவரது வேட்பு மனுவை ஏற்கக் கூடாது என்று தெரிவித்திருந்தனர்.

இது குறித்து ஆத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் துரை கூறியதாவது - வேட்பாளர் மீது இதுநாள் வரை இதுபோன்ற எந்த புகாரும் வந்தது கிடையது. அதனால், ஜாதி சான்று ஆவணங்களை குறித்து ஆய்வு செய்த பின் மனு ஏற்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். அதனால், வேட்பு மனுவில் வழங்கப்படும் ஜாதி தொடர்பான ஆவணங்கள் உண்மை தன்மை குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
இந்நிலையில் தான் தி.மு.க. தலைமை ஜீவா ஸ்டாலினை மாற்றிவிட்டு சின்னதுரையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.