தலைமுடியை வெட்டி வர சொன்னதற்காக, பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற +2 மாணவன்
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த முகாசபருர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் மகன் ஜெயக்குமார். இவர் அக்கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வருகிறார்.
தலை முடியை வெட்டச் சொன்ன தலைமையாசிரியர்
இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் மாணவன் ஜெயக்குமார் பள்ளிக்கு சென்றிருக்கிறார். அப்போது, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியா ஜோசப் ராஜா, அதிகளவில் தலைமுடி வைத்துள்ள மாணவர்களை தனியாக அழைத்து, தலை முடியை வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வர வேண்டுமென அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது.
அப்போது, ஜெயக்குமார் தலை முடியை வெட்ட மாட்டேன் என்று சொன்னதாகவும், அதற்கு தலைமை ஆசிரியர், தலை முடியை வெட்ட கூடாது என்று நினைத்தால், பள்ளியின் பெற்றோர் கழக பொறுப்பாளர்களிடம் கையொப்பம் வாங்கி வா என்று கூறி திட்டியதாக சொல்லப்படுகிறது.
பூச்சி மருந்து குடித்த மாணவன்
இதனால், மனவேதனை அடைந்த மாணவன் ஜெயக்குமார், பள்ளியை விட்டு வெளியே வந்து அக்கிராமத்தில் அமைந்துள்ள மருந்து கடையில் எறும்புக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை வாங்கி, தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு மீண்டும் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். மாணவன் மதியம் பள்ளி முடியும் தருவாயில், தான் மருந்து குடித்து விட்டதாக சக மாணவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த, மாணவனின் பெற்றோர்கள் உடனடியாக மாணவனை, மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையினர் விசாரணை
இதுகுறித்து மங்கலம்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலை முடியை தலைமையாசிரியர் வெட்டி வர சொன்ன காரணத்தினால், பிளஸ் டூ மாணவன் பூச்சிமருருந்து குடித்து, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.