ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் தற்கொலை முயற்சி: திடுக்கிடும் சம்பவம்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மனைவி காளியம்மாள். இவர்கள் தனது குடும்பத்தினர் 12 பேருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
அப்போது புகார் பேட்டியில் புகாரை செலுத்திவிட்டு செல்லுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் ஆட்சியர் சந்திக்க வேண்டும் என தெரிவித்த சக்திவேல் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளார். அப்போது அருகில் இருந்த போலீஸார் அவரை தடுத்து அவரது பிரச்சனையை பற்றி கேட்டனர், அப்போது அவர் கூறியதாவது, கரிக்காலி எல்.புதூர் பகுதியில் வசித்து வந்த எங்கள் பெரியம்மா சகுந்தலா என்ற மாரிம்மாள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வயது முதிர்வு காரணமாக இறந்துவிட்டார்.
அவரது வாரிசு நான்(சக்திவேல்), செல்வி மற்றும் கலையரசி ஆகியோர் மட்டுமே என வேடசந்தூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதன் மூலம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்று பெற்றுள்ளோம். இதனை அடுத்து சகுந்தலாவின் பெயரிலிருந்த 6.30 ஏக்கர் நிலம், கூட்டுப் பட்டாவாக எங்களது பெயருக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், எங்களது உறவினர் குருமூர்த்தி, அர்ஜூன் ஆகியோருக்கு ஆதரவாக, வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவம், குஜிலியம்பாறை வட்டாட்சியரிடம் பட்டா மாறுதல் ரத்து செய்ய அறிவுறுத்தியுள்ளார். அதன்படி எங்கள் பெயருக்கு மாறுதல் செய்யப்பட்ட பட்டாவை ரத்து செய்துவிட்டனர்.
மேலும் இதுபற்றி ஆட்சியர் சிவபாலன் அவர்களிடம் கேட்டதற்கு எம்.எல்.ஏ சொல்வதை தான் தான் செய்ததாக கூறினார். இதனையடுத்து எம்.எல்.ஏ பேச்சைக் கேட்டு தங்களது பெயரை நீக்கிய வட்டாசியர் மற்றும் துணை வட்டாசியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.