எம்.எல்.ஏ.க்களிடம் பணம் கேட்ட ED அதிகாரி; ஆனால் கிடைத்ததோ தர்ம அடி - என்ன நடந்தது!
தன்னை அமலாக்கத்துறை அதிகாரி என்று கூறி எம்.எல்.ஏ.க்களிடம் பணம் பறிக்க முயனர் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலி ED அதிகாரி
புதுச்சேரி மாநிலம் உழவர்கரை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ சிவசங்கரன் செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர் அமலாக்கத்துறை அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார். பின்னர் அந்த நபர், நீங்கள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார் வந்துள்ளது.
இதுபற்றி விசாரிக்க வேண்டும்" என எம்எல்ஏ சிவசங்கரனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவரும் தாராளமாக விசாரித்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதனையடுத்து சில நிமிடங்களில் எம்எல்ஏ சிவசங்கரன் வீட்டிற்கு சென்ற அந்த நபர் வருமானம் மற்றும் சொத்து விவரங்களை கேட்டுள்ளார். ஆனால் சந்தேகமடைந்த சிவசங்கரன், போலீஸ் மற்றும் தனது ஆதரவாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக அங்கு வந்த போலீசார், அமலாக்கத்துறை அதிகாரி என்று கூறிய நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அந்த நபரை தர்ம அடி கொடுத்து விசாரித்துள்ளனர். இதில் பயந்து போன அந்த நபர், தான் அமலாக்கத்துறை அதிகாரி இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
போலீசார் விசாரணை
இதனையடுத்து அந்த நபரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது, அந்த நபர் சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரை சேர்ந்த வரதராஜன் ஆழ்வார் (35) என்பது தெரியவந்தது.
மேலும், எம்எல்ஏ சிவசங்கரன் வீட்டிற்கு வருவதற்கு முன், காலாப்பட்டு தொகுதி எம்எல்ஏ வான கல்யாணசுந்தரம் வீட்டிற்கும், லாஸ்பேட்டை சாந்தி நகரை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் வீட்டிற்கும் சென்று அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பணபரிவர்த்தனை மோசடி செய்ததாக புகார் வந்துள்ளதாகவும், அந்த தவறை மறைக்கவும், உயர் அதிகாரிகளை சரிகட்டவும் 2 எம்.எல்.ஏ.க்களிடம் தலா ரூ.1 லட்சம் லஞ்சம் தரவேண்டும் எனவும் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர்கள் பணம் கொடுக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபர், உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு என்கிற குப்புசாமிக்கும், விழுப்புரம் எம்.பி. ரவிக்குமாருக்கும் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு தன்னை அமலாக்க துறை அதிகாரி எனக்கூறி பணம் கேட்டுள்ளார். அதற்குள் அந்த நபர் போலீசில் சிக்கிக்கொண்டார்.