முதல் காதலனை கொல்ல முயற்சி... 2வது காதலனுடன் கைதான பெண்
திருப்பதியில் முதல் காதலனை கொல்ல முயற்சித்த பெண் மற்றும் அவரது 2வது காதலனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஆத்மகூரூ அரசு மருத்துவமனையில் ஸ்டாஃப் நர்சாக வேலை செய்து வரும் ஆசிபா என்பவருக்கும், அதே மருத்துவமனையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஆக வேலை செய்து வரும் நசீர் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
இவர்களுடைய காதலை ஆசிபாவின் பெற்றோர் ஏற்க மறுத்து சலீம் என்பவருடன் அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால் மூன்றே மாதத்தில் இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர். அதன்பின்னர் ஆசிபா தன்னுடைய காதலன் நசீருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இதனிடையே ரகுமான் என்பவர் இவர்களது வாழ்வில் இல்வாழ்க்கையில் வர புயல் வீச ஆரம்பித்தது.
நாளடைவில் ரகுமானுக்கு ஆசிபாவுக்கும் இடையே காதல் மலர இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள திட்டம் போட்டனர். இதற்கு நசீர் இடையூறாக இருப்பார் என்று கருதிய இருவரும் எண்ணினர்.
அதேசமயம் ரகுமானை திருமணம் செய்யப்போவதாக நசீரிடம் கூறிய ஆசிபா, காதலித்த போது எடுத்து கொண்ட படங்கள் மற்றும் வாட்ஸ்அப் சாட்கள் ஆகியவற்றை டெலிட் செய்ய வேண்டுமென்று கூறியுள்ளார். இதற்காக நசீரை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்த ஆசிபா மற்றும் ரகுமான் ஆகியோர் அவருடைய செல்போனில் இருந்த படங்கள், வீடியோக்கள், வாட்ஸ்அப் சாட்கள் ஆகியவற்றை அழித்தனர்.
ஆனாலும் தங்களுடைய எதிர்கால திருமண வாழ்க்கைக்கு நசீர் இடையூறு ஏற்படுத்துவார் என்று கருதிய இருவரும் அவரை கொல்ல முயற்சித்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் நசீர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஆத்மகூரை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அதே பாதையில் காருடன் காத்திருந்த ரகுமான் நசீர் மீது காரை மோத விட்டார்.
இந்த சம்பவத்தில் நசீர் படுகாயமடைந்த நிலையிலல், இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ரகுமானை பிடிக்க முயன்றனர்.அதற்குள் ரகுமான் அங்கிருந்து காரில் தப்பி சென்றுவிட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுபற்றி தகவல் அறிந்த ஆத்மகூரூ போலீசார் விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து நசீரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் தனக்கும் ஆசிபாவுக்கும் இடையே இருந்த காதல், அவருக்கு சலீம் என்பவருடன் நடைபெற்ற திருமணம், அதனை தொடர்ந்து ஏற்பட்ட விவாகரத்து, பின்னர் ரகுமானுக்கும் ஆசிபாவுக்கும் இடையே ஏற்பட்ட காதல் ஆகிய அனைத்தையும் நசீர் கூறினார். இதையடுத்து ரகுமான் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார் ரகுமான், ஆசிபா ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.